HomeFeatured Newsமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறிக்கும் மரண தண்டனை!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறிக்கும் மரண தண்டனை!

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தும், அதைத் தடுக்கத் தவறிய குற்றத்திற்காக இலங்கை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை மீறல் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவருக்கு எதிராக இலங்கை சட்டமா அதிபரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாகக் கருதி மரண தண்டனை விதித்தனர்.

எனினும், இந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி வீராஜ் வீரசூரிய, பிரதிவாதிகளை விடுவித்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2022 பிப்ரவரி 18 அன்று, அரசுத்தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், பிரதிவாதிகளின் சாட்சியங்களைக் கோராமலேயே இருவரையும் அப்போதைய நீதிமன்ற அமர்வு விடுதலை செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்துச் சட்டமா அதிபர் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதிவாதிகளின் தற்காப்புச் சாட்சியங்களைக் கேட்காமல் விடுதலை செய்தது சட்டப்பூர்வ தவறு எனக் கூறி, வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மறுவிசாரணையின் முடிவிலேயே, கடமையைச் செய்யத் தவறி உயிரிழப்புகளுக்குக் காரணமான குற்றத்திற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular