பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள மின்டனாவோ (Mindanao) பிராந்தியத்தில் இன்று காலை 7.8 ரிக்டர் அளவில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், அண்டை நாடான இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை உள்ளூர் நேரப்படி 07:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமியின் அடியில் சுமார் 35 கிலோமீட்டர் (21.7 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் நிலநடுக்கவியல் முகமையான ‘பிவோல்க்ஸ்‘, மின்டனாவோ தீவின் தென்கோடி முனையான சராங்கனி மாகாணத்திலுள்ள ‘ஜெனரல் சாண்டோஸ்‘ நகரக் கடற்கரையை ஒட்டி இந்த நிலநடுக்கம் தாக்கியதாகக் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிரத்தால் ஜெனரல் சாண்டோஸ் நகரிலுள்ள வணிக வளாகங்கள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, ஒரு நபர் உயிரிழந்துள்ளதாகவும், நால்வர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிலிப்பைன்ஸின் கடற்கரைப் பகுதிகளில் வழக்கமான கடல் அலையின் மட்டத்தை விட 1 முதல் 3 மீட்டர் (10 அடி வரை) உயரத்திற்குச் சுனாமி அலைகள் எழக்கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறு ‘பிவோல்க்ஸ்‘ அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல், இந்தோனேசியா தனது வடகிழக்குக் கடற்கரைப் பகுதிக்கும், ஜப்பான் தனது நாட்டின் தென்னகக் கடற்கரைப் பகுதிகளுக்கும் (இபராகி முதல் ஒகினாவா வரை) சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளன. இருப்பினும், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளுக்கு எந்தவொரு சுனாமி ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5,80,000 மக்கள் வசிக்கும் சராங்கனி மாகாணத்தின் அலாபெல் (Alabel) நகரக் காவல் துறைத் தலைவர் பென்ஜி அன்சேட்டா கூறுகையில், காவல் நிலையத்தில் வாராந்திரக் கொடியேற்ற நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதிர்ச்சியில் அங்கிருந்த சிலர் மயக்கமடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், “எங்கள் வாழ்நாளில் நாங்கள் அனுபவித்த மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுதான்” என்றும் அவர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ‘நெருப்பு வளையம்‘ (Ring of Fire) எனப்படும் நில அதிர்வுப் பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
