கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜப்பானின் நோட்டோ பகுதியில் உள்ள விமானநிலையம் ஒன்று, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் இன்று முதல் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்திற்கு தற்காலிகமாகப் பிரபல அனிமேஷன் உலகமான ‘போகிமான்‘ (Pokemon) பிராண்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த உள்ளூர் விமான நிலையத்திற்கு “நோட்டோ சடோயாமா போகிமான் வித் யூ ஏர்போர்ட்” என்று அதிகாரப்பூர்வமாக மாற்றுப் பெயர் சூட்டப்பட்டு, அதனை வரவேற்கும் வகையில் விமான வடிவ பலூனில் மிதக்கும் ‘பிகாச்சு‘ (Pikachu) பொம்மை விமான நிலைய முகப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, புத்தாண்டு தினத்தன்று நோட்டோ தீவகற்பப் பகுதியில் (Noto Peninsula) ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது.
அப்பகுதியில் இரவு தங்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, நிலநடுக்கத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது வெறும் 30 சதவீதமாக மட்டுமே இன்னமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத் துறையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யும் இந்த புதிய முயற்சியின் திறப்பு விழாவில், விமானி உடையில் வந்திருந்த நிஜ மனித அளவிலான பிகாச்சு மாஸ்காட் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி இதனை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
இந்த விமான நிலையத்தின் வரவேற்பு அறைச் சுவர் உட்பட வளாகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு போகிமான் கதாபாத்திரங்களின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
‘போகிமான் வித் யூ‘ (Pokemon With You Foundation) அறக்கட்டளையின் அறிவிப்பின்படி, இந்த விசேட பெயரும் அலங்காரங்களும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோட்டோ பகுதிக்கு மீண்டும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
