HomeTop Newsசுவிட்சர்லாந்தில் பரபரப்பு: மர்ம மிரட்டல் கடிதத்தால் பள்ளி அவசரமாகக் காலி செய்யப்பட்டது!

சுவிட்சர்லாந்தில் பரபரப்பு: மர்ம மிரட்டல் கடிதத்தால் பள்ளி அவசரமாகக் காலி செய்யப்பட்டது!

சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியிலுள்ள ஜூக் நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற வதிவிடப் பள்ளிக்கு வந்த மர்ம மிரட்டல் கடிதம் காரணமாக, அங்கு பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பள்ளிக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்ததாக ஜூக் நகரக் காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்கால மீட்புப் படையினர் மற்றும் பொிலிஸார், உடனடியாக அந்தப் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், அங்குள்ள கட்டிடங்களில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் தொடங்கின.

இந்த மிரட்டல் சம்பவம் நடந்த சமயத்தில் பள்ளி வளாகத்திற்குள் சுமார் 30 மாணவர்கள் மற்றும் காப்பாளர்கள் (Caretakers) இருந்தனர்.

அவர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அரவணைப்புடன் பராமரிக்கப்பட்டனர்.

பள்ளி வளாகம் முழுமையாகக் காலி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆபத்தான அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு அங்குல அங்குலமாகத் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.

எனினும், பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகும் அங்கிருந்து எந்தவொரு சந்தேகத்திற்குரிய பொருளும் கண்டறியப்படவில்லை.

இதனையடுத்து, இரவு 8 மணியளவில் சோதனையை நிறைவு செய்த பாதுகாப்புப் படையினர், பள்ளி கட்டிடங்களை மீண்டும் ஒப்படைத்தனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தங்களது அறைகளுக்குத் திரும்பினர். இந்தச் சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்தோ அல்லது அச்சுறுத்தலோ இல்லை என்று காவல் துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார், இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்து சுவிஸ் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular