HomeFeatured Newsசுரேஷ் சலே கைது விவகாரம்: சிக்கப் போகும் பெரும்புள்ளிகள்

சுரேஷ் சலே கைது விவகாரம்: சிக்கப் போகும் பெரும்புள்ளிகள்

தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி துவான் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சலே, தற்போது மேலும் 90 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சலேயின் இந்தக் கைது நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் மீது நேரடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான போரின் போது சலே மிக முக்கிய பங்காற்றியவர் எனவும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் அவரைப் பழிவாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிங்கள பௌத்த கொள்கையுடைய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் இந்தக் கைது நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

நாட்டின் அரசியல் பரப்பில் பல்வேறு தரப்பினரும் சலே கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அவர் சிறையில் நடத்தப்படும் விதம் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி சுரேஷ் சலே உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

எனினும், அவரது உடல் நிலையைக் கருத்திற்கொண்டு நேற்றிரவு அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது கைது குறித்து மனைவி, தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் தமது கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, சுரேஷ் சலேக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாகப் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்டமை மற்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அவருக்கு எதிராக மிக வலுவான சான்றுகள் கிடைத்துள்ளதன் அடிப்படையிலேயே, தேசிய பாதுகாப்புத் துறையின் மிக முக்கியமான பதவியை வகித்த அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் இலங்கை அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்த முனைவதாக எதிர்க்கட்சிகளும், குறிப்பாகச் சிங்களப் பேரினவாதக் கட்சிகளும் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளன.

மறுபுறம், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கும் நோக்கிலேயே இந்த விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசாங்கத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகப் பாதுகாப்புத் தரப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular