HomeFeatured Newsமக்கள் தொகையை கட்டுப்படுத்தும் யோசனையை நிராகரித்த சுவிஸ் மக்கள்

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் யோசனையை நிராகரித்த சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55 சதவீதமானோர் இந்த முன்மொழிவுக்கு எதிராகவும், 45 சதவீதமானோர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளதாகத் தெரியவருகிறது.

வலதுசாரி கட்சியான ‘சுவிஸ் மக்கள் கட்சி’ நீண்டகாலமாக முன்னெடுத்து வரும் குடியேற்ற எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த முன்மொழிவைக் கொண்டு வந்திருந்தது.

நாட்டின் பெரும்பான்மையினரிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திய இந்த வாக்கெடுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுவிட்சர்லாந்தின் ‘சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தை’ ஆபத்தில் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 2002ஆம் ஆண்டில் 7.3 மில்லியனாக இருந்த சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை, தற்போது 9.1 மில்லியனாக வேகமாக உயர்ந்துள்ளது. இதில் 27 சதவீதமானோர் சுவிஸ் குடியுரிமை பெறாதவர்கள் ஆவர்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் மீதான அழுத்தத்தைக் குறைக்கலாம் என்ற மக்கள் கட்சியின் வாதம், பெரும்பான்மையான வாக்காளர்களைக் கவரவில்லை என்றே தோன்றுகிறது.

சுவிட்சர்லாந்தின் பொதுச் சேவைகளையும் அதன் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காகவே மக்கள் தொகை வரம்பு கொண்டு வரப்பட்டதாக மக்கள் கட்சி வலியுறுத்திய போதிலும், சமூகப் பிரச்சினைகளுக்கு அகதிகளையும் சிறுபான்மையினரையுமே அக் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

மறுபுறம், இந்த முடிவினால் ஐரோப்பாவின் ஒற்றைச் சந்தைக்கான  சுவிட்சர்லாந்தின் முக்கிய அணுகலை இழக்க நேரிடும் என அந்நாட்டு வர்த்தகத் தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

ஏனெனில், சுவிட்சர்லாந்தின் தயாரிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே விற்கப்படுகின்றன. இதற்கான சந்தை அணுகல், ஐரோப்பிய மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கான சுவிட்சர்லாந்தின் உடன்பாட்டைப் பொறுத்தே அமைந்துள்ளது.

ஒருவேளை இந்த மக்கள் தொகை வரம்பு அங்கீகரிக்கப்பட்டிருந்தால், சுவிட்சர்லாந்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டியிருந்திருக்கும்.

மேலும், தற்போதைய நிலையற்ற உலகச் சூழலில் இந்த நடவடிக்கை தங்களைத் தனிமைப்படுத்திவிடும் என்று சில சுவிஸ் வாக்காளர்கள் கவலை அடைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்து ஒரு நடுநிலை நாடாக இருந்தபோதிலும், அதன் அண்டை ஐரோப்பிய நாடுகளைப் போலவே பாதுகாப்புக்கான செலவினங்களை அதிகரித்து வருகிறதுடன், பாதுகாப்புத் துறையில் ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறது.

சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறையின்படி, அனைத்து முக்கிய முடிவுகளும் வாக்கெடுப்பு மூலமே எடுக்கப்படுகின்றன. இதற்காகப் பிரச்சாரகர்கள் 100,000 கையெழுத்துகளைத் திரட்டினாலே நாடு தழுவிய வாக்கெடுப்பை உறுதி செய்ய முடியும்.

இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட இரு இளம் அரசியல்வாதிகள் பிபிசியிடம் பேசினர்.

“நாம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம். கட்டுப்பாடற்ற குடியேற்றம் காரணமாக சுவிட்சர்லாந்து இனி சுவிட்சர்லாந்தாக இருக்காது” என்று பேர்ன் (Bern) மாகாண நாடாளுமன்றத்தில் சுவிஸ் மக்கள் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 29 வயதுடைய நில்ஸ் ஃபிக்டர் (Nils Fiechter) கவலை தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டில் ரோமா மற்றும் நாடோடி சமூகங்களை இலக்கு வைத்து வெளியிட்ட சுவரொட்டி தொடர்பாக, ஃபிக்டர் மற்றும் மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் இணைத் தலைவர் ஆகியோருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு சுவிஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தால் இனப் பாகுபாடு காட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

வீட்டுப் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், சுமையால் திணறும் பள்ளிகள் மற்றும் சமூகச் சேவைகள் போன்ற சுவிட்சர்லாந்தின் பிரச்சினைகளுக்குக் குடியேற்றமே நேரடி காரணம் என்று அவர் நம்புகிறார்.

ஆனால் பேர்ன் நகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 வயதுடைய சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஹெலின் ஜெனிஸ் (Helin Genis), இந்த வாதங்களை வெறும் பழிசுமத்தும் நடவடிக்கை என்று நிராகரித்தார்.

மக்கள் தொகை வரம்பு குறித்த இந்த எதிர்பார்ப்பு, சுவிட்சர்லாந்தின் வர்த்தக சங்கமான எகனாமிஸ்விஸ் (Economiesuisse) அமைப்பிற்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் தலைமைப் பொருளாதார நிபுணர் ருடால்ப் மின்ச் (Rudolf Minsch) கூறுகையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், “ஐரோப்பிய ஒன்றியத்துடனான எமது உறவுகளில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையின் நன்மைகளை மட்டும் அனுபவித்துக்கொண்டு, மக்களின் சுதந்திர நடமாட்டம் போன்ற கடப்பாடுகளில் இருந்து நாடுகள் தப்பிக்க முடியாது என்று பிரஸ்ஸல்ஸ் (Brussels) நீண்டகாலமாக ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பு நாடுகளுக்கு எச்சரித்து வருகிறது.

“சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான வர்த்தகப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியமே இன்னும் இருந்து வருகிறது. எனவே எங்களுடைய முக்கிய வர்த்தகப் பங்காளியுடன் நிலையான மற்றும் தெளிவான உறவுகளைக் கொண்டிருப்பது எமது நலனுக்கு உகந்தது” என்றும் மின்ச் விளக்கினார்.

சுவிஸ் முதலாளிகளும் தொழிலாளர் பற்றாக்குறை குறித்தும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள திறமையான தொழிலாளர்களைப் பெறுவதற்கான வாய்ப்பை இழப்பது குறித்தும் கவலை அடைந்தனர். சுவிட்சர்லாந்தின் ஹோட்டல்களில் பணிபுரிபவர்களில் பாதி பேர் குடியேறியவர்கள் ஆவர். மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களும் வெளிநாட்டுத் தொழிலாளர்களையே பெரிதும் நம்பியுள்ளன.

குடியேற்றம் காரணமாக மருத்துவமனை படுக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது இந்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் சுவிஸ் மக்கள் கட்சி வாதிட்டது.

ஆனால் எதிர்ப்பாளர்கள் இது யதார்த்தமற்றது என்று குறிப்பிட்டதுடன், சுவிஸ் மக்கள் தொகையில் 20 சதவீதமானோர் இப்போது 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினர்.

வயதாகி வரும் மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நிதியளிப்பதற்கும் இளம் தொழிலாளர்கள் மற்றும் இளம் வரி செலுத்துவோர் தேவைப்படுகிறார்கள் — ஆனால் சுவிட்சர்லாந்து அந்த இளம் தொழிலாளர்களைத் தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்ளவில்லை என்று அவர்கள் எச்சரித்தனர்.

சுவிட்சர்லாந்து, அதன் அண்டை ஐரோப்பிய நாடுகளைப் போலவே பாதுகாப்புக்காக அதிக நிதி ஒதுக்கி வருகிறது. அதன் நடுநிலைமைக்கு மத்தியிலும், அண்டை நாடுகளுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைத் திட்டமிட்டு வருகிறது.

சமூக ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் புல்ட் (Jon Pult) பிபிசியிடம் பேசுகையில், மக்கள் தொகை வரம்பு குறித்து தனக்கிருக்கும் மிகப்பெரிய பயம், இந்த “நிலையற்ற மற்றும் ஆபத்தான உலகில்” தங்கள் நாடு தனிமைப்படுத்தப்பட்டுவிடுவதுதான் என்று கூறினார்.

சுற்றுலா, மருத்துவமனைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் மிகவும் தேவைப்படும் தொழிலாளர்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் சில வாக்காளர்கள் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular