பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக அமுலிலுள்ள இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதை நோக்கிய தீர்க்கமான நகர்வாக, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவினால் புதிய சட்டமூலத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் என நீதியமைச்சர் உறுதியளித்தார்.
விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்கள், உரிய மேல் நீதிமன்றத்தின் ஊடாக பிணை கோரி விண்ணப்பிக்க முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.
அத்துடன், பிணை வழங்குவது என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானம் அல்ல எனக் தெளிவுபடுத்திய அவர், இவ்வாறான விவகாரங்களில் நீதித்துறை சுயாதீனமாகவே தொழிற்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
