அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஃபெடரல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று வழங்கிய அதிரடி தீர்ப்பில், டிரம்ப் நிர்வாகம் குடியகல்வு நீதிமன்றங்களில் (Immigration Courts) அகதிகளைக் கைது செய்ய நாடு தழுவிய அளவில் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல், அமெரிக்க குடியகல்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரிகள், நீதிமன்ற வளாகங்களுக்குள் நுழைந்து வழக்கு விசாரணை முடிந்து வரும் அகதிகளை உடனடியாகக் கைது செய்யும் நடைமுறையைக் கையாண்டு வந்தனர்.
தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த இந்த நடைமுறைக்கு தற்போதைய நீதிமன்றத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த அதிரடி கைது கொள்கையானது வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சட்டத்தின்படி நியாயம் கேட்க வேண்டிய நீதிமன்றங்களை இந்த விதி பயம் நிறைந்த பகுதிகளாக மாற்றிவிட்டதாகவும், விதிகளை மதித்து நடப்பவர்களையே இது தண்டிப்பதாக அமைந்திருக்கிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
முன்னதாக, நீதிமன்ற வளாகங்களில் கைது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியிருந்த நீண்டகால வழிகாட்டுதல்களை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்திருந்தது.
ஆபத்தான குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் தேவை என்றே டிரம்ப் அதிகாரிகள் இதற்கு வாதாடினர்.
இதுதொடர்பான வழக்கில் 71 பக்கங்கள் கொண்ட விரிவான தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி. கேசி பிட்ஸ், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது மற்றும் விவேகமற்றது என்று கடுமையாக சாடினார்.
இத்தகைய கைது நடவடிக்கைகள் காரணமாக, தங்களுக்கு என்னவாகுமோ என்ற பயத்தில் அகதிகள் நீதிமன்ற விசாரணைக்கு வராமல் தவிர்க்கும் சூழல் உருவாகிறது என்பதை டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை முற்றிலும் புறந்தள்ளியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிவில் கைதுகளுக்கான கட்டுப்பாடுகளை ஏன் நீக்கினார்கள் என்பதற்கு குடியகல்வுத்துறையிடம் முறையான விளக்கம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த தீர்ப்பை மனித உரிமை அமைப்புகள் வெகுவாக வரவேற்றுள்ளன. நீதிமன்றம் என்பது நீதியைத் தேடி அடைக்கலம் புகும் இடமே தவிர, அதிகாரிகளின் வேட்டைக்களம் அல்ல என்றும், எந்தவொரு புலம்பெயர்ந்தவரும் தனது சுதந்திரத்திற்கும், நீதிமன்றத்தில் வாதாடும் உரிமைக்கும் இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படக்கூடாது என்றும் சிவில் உரிமைகளுக்கான மூத்த வழக்கறிஞர் ஜோர்டான் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், டிரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் பொது ஆலோசகர் ஜேம்ஸ் பெர்சிவல் இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்படும் ஒருவர் உடனடியாகக் காவலில் எடுக்கப்படுவதே முறை என்றும், அதற்கு மாறாக மாவட்ட நீதிபதி உத்தரவிடுவது என்பது அமெரிக்காவிற்கு எதிரான, எல்லைகளற்ற கொள்கையை ஆதரிக்கும் ஒரு வெற்று ‘நீதித்துறை ஆக்டிவிசம்’ (judicial activism) ஆகும் என்றும் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
