HomeFeatured Newsஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை: 1300 பேர் பலி

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை: 1300 பேர் பலி

ஐரோப்பாவில் வரலாறு காணாத வகையில் கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் வெப்ப அளவு புதிய சாதனைகளைப் படைத்துள்ளதோடு, இந்த அதீத வெப்பம் தற்போது கிழக்கு நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில், கடந்த ஜூன் 21 முதல் ஐரோப்பாவில் நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக 1,300-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெப்ப அழுத்தம் (Heat stress) என்பது பெரும்பாலும் ஒரு ‘அமைதியான கொலையாளி’ (Silent killer) என்று அழைக்கப்படுவதாகவும், ஐரோப்பிய வீடுகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் இந்த அளவிலான வெப்பநிலையைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டவை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உலகிலேயே மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டம் ஐரோப்பாதான் என்றும், இது உலகளாவிய சராசரியை விட இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய சூழலில் மில்லியன் கணக்கான மக்கள் அதீத வெப்பத்தில் வாடி வருவதோடு, பள்ளிகள் மூடப்பட்டு, மின்சாரக் கட்டமைப்புகளும் முடங்கியுள்ளன.

பிரான்ஸ் தேசிய சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்ட தகவலின்படி, கடந்த புதன்கிழமை முதல் அந்நாட்டில் வழக்கத்தை விட சுமார் 1,000 மரணங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.

இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கே ஏற்பட்டுள்ளன என்றும், குறிப்பாக வீடுகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 40% வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஜெர்மனி தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான நாளை எதிர்கொண்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கோஷென் (Coschen) என்ற இடத்தில் 41.7°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. செக் குடியரசின் டோக்சானி (Doksany) பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டாவது புதிய சாதனையாக 41.1°C வெப்பநிலையும், போலந்தின் சிலுபிஸ் (Slubice) நகரில் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பப் பதிவாக 40.5°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளன.

இந்த அதீத வானிலைக்குக் காலநிலை மாற்றமே (Climate change) முதன்மைக் காரணம் என்று டெட்ரோஸ் சாடியுள்ளார்.

காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலால், ‘ஒரு தலைமுறைக்கு ஒருமுறை’ மட்டுமே வீசக்கூடிய வெப்ப அலைகள், இப்போது ஆண்டுதோறும் நிகழும் ஒன்றாக மாறிவிட்டன என்று கவலை தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உடனடியாக ‘வெப்ப ஆரோக்கியச் செயல்பாட்டுத் திட்டங்களை’ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular