இன்றைய தினம் சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேரிட்ட இரு வேறு விமான விபத்துகளில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான ராஸ் தனூராவில் (Ras Tanura), அந்நாட்டின் அரசுக்குச் சொந்தமான முன்னணி எண்ணெய் நிறுவனமான ‘சவூதி அரம்கோ‘ (Saudi Aramco) நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை என்றும், இது குறித்து முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மற்றொரு சம்பவமாக வடகிழக்கு பிரான்சின் டோம்ப்ளெய்ன் (Tomblaine) நகருக்கு அருகே சிவிலியன் ரக சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விமானம் அங்குள்ள பாராசூட் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமானது என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் விமானி, ஐந்து மாணவர்கள் மற்றும் ஐந்து பயிற்றுவிப்பாளர்கள் (Instructors) அடங்குவர்.
இந்த இரு விபத்துகளுக்குமான துல்லியமான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை; இரு நாட்டு அதிகாரிகளும் விபத்து குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
