சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் வெப்ப அலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேசல் நகர நிர்வகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பேசல்–ஸ்டாட் கான்டனில் தீ மூட்டுவதற்கும், வானவெடிகளை வெடிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடையைப் பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரு இடங்களிலும் கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுக்களுடன் கலந்தாலோசித்த பிறகே வானவெடிகளை ரத்து செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இருப்பினும், கொண்டாட்டங்களை சிறப்பிக்கும் வகையில் பின்வரும் மாற்று நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரைன் நதியில் தீயணைப்புப் படகு மற்றும் ‘பேசல் வாட்டர் ஸ்கீ கிளப்‘ பங்கேற்கும் நீர்சார் காட்சி நிகழ்வுகள் நடைபெறும்.
ப்ரூடர்ஹோல்ஸ் பகுதியில் வானவெடிகள் இல்லாத சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் தண்ணீர், ஒளி மற்றும் லேசர் (Water, Light and Lasers) காட்சிகள் இடம்பெறும்.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்கும் பாரம்பரிய விளக்கு ஊர்வலம் ஏற்கனவே திட்டமிட்டபடி வழக்கம்போல் நடைபெறும்.
சுவிட்சர்லாந்தில் காட்டுத்தீ ஆபத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், பேசல் மட்டுமின்றி மேலும் பல கான்டன்களும் தேசிய தின வானவெடி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன.
