அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள ஆயுத மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை அதிகரித்துள்ளது.
கடந்த வார இறுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களால், உலகின் முக்கிய கடல்வழிப் பாதையான ‘ஹோர்முஸ் நீரிணையில்‘ வழமையான கப்பல் போக்குவரத்துப் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் எதிரொலியாக சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை 0.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 73.21 டாலராக வர்த்தகமானது.
கடந்த பெப்ரவரி 28ம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கியதற்கு முந்தைய நாளை விட இது 127 சென்ட்கள் அதிகமாகும்.
ஜூன் 17 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
எனினும், அதைச் செயல்படுத்துவதில் உள்ள குளறுபடிகளால் மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த வியாழக்கிழமை வணிகக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வார இறுதியில் இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக்கொண்டது எண்ணெய் சந்தையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் விலை உயர்வு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகள் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், ஆசிய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை காலை கலவையான போக்குடன் காணப்பட்டன.
டோக்கியோ மற்றும் சியோல் சந்தைகள் வீழ்ச்சியடைந்த வேளையில், ஹாங்காங் மற்றும் தைபே சந்தைகள் லாபத்தைப் பதிவு செய்தன.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகம் நடைபெறும் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில், இரண்டு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அமெரிக்க மத்திய கட்டளைகம் (US Central Command) கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதற்குப் பதிலடியாக பகரைன் (Bahrain) மற்றும் குவைத்தில் (Kuwait) உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியது.
மோதல்கள் தீவிரமடைந்துள்ள போதிலும், தாக்குதல்களை நிறுத்திவிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வருகிற செவ்வாய்க்கிழமை கத்தார் நாட்டின் தோஹாவில் (Doha) இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த உடன்பாடு குறித்தோ அல்லது திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தை குறித்தோ ஈரான் தரப்பு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.
