HomeFeatured Newsசலேவின் டிஜிட்டல் சாதனங்கள் குறித்து அவரது சட்டத்தரணி வெளியிட்ட முக்கிய தகவல்

சலேவின் டிஜிட்டல் சாதனங்கள் குறித்து அவரது சட்டத்தரணி வெளியிட்ட முக்கிய தகவல்

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் டிஜிட்டல் சாதனங்கள் தொடர்பில் அவரது சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தனது இராணுவ சேவையை நிறைவு செய்து ஓய்வுபெறும் போது, தனக்கு வழங்கப்பட்டிருந்த லப்டொப் கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகபூர்வ பொருட்களையும் இராணுவத் தளபதியிடம் முறையாக ஒப்படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் சுரேஷ் சலே இராணுவத்திலிருந்து விலகிய போதே, அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ சீருடைகள், குறிப்பேடுகள், உத்தியோகபூர்வ அறிக்கைகள், பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் வாகனங்கள் மட்டுமன்றி அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஏதேனும் விபரங்கள் தேவைப்படின், இராணுவத் தளபதியை அழைத்து அந்தப் பொருட்கள் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்துக் கேட்டறிய முடியும் என தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் எந்தவொரு விசாரணைக்கும் தொடர்புடைய டிஜிட்டல் சாதனங்கள் எதுவும் தற்போது சுரேஷ் சலேவிடம் இல்லை என அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சலேவிடம், 2024ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட HP ரக லப்டொப் கணினி ஒன்றும், iPhone 12 ரக கையடக்கத் தொலைபேசி ஒன்றும் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவை தற்போதைய விசாரணைகளுக்கு உட்பட்ட காலப்பகுதிக்கு பின்னரே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தச் சாதனங்களில் சுரேஷ் சலே மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட தரவுகள் மட்டுமே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தரவுப் பாதுகாப்பிற்கான உரிமையின் அடிப்படையிலேயே இந்தத் தனிப்பட்ட சாதனங்களின் கடவுச்சொற்களை வழங்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குற்றத்துடனும் தொடர்புடையவர் என உறுதிப்படுத்தப்படாத ஒரு நபரின் தனிப்பட்ட தரவுகளையோ அல்லது குடும்ப விபரங்களையோ பெற்றுக்கொள்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டபூர்வ உரிமை இல்லை என சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய தரவுகளைப் பெற வேண்டுமாயின் நீதவான் முன்னிலையில் அறிக்கை செய்து முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடவுச்சொற்கள் இல்லாமலேயே விசாரணைகளை முன்னெடுப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட நிறுவனங்கள் உள்ள போதிலும், தனது கட்சிக்காரரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தகவலையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப் போவதில்லை என சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம மேலும் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular