HomeFeatured Newsஅமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடு!

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை விலக்கிக் கொள்வதற்கும் இருநாட்டு அதிகாரிகளும் முதற்கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் புள்ளியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் இந்த உடன்பாட்டில் இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இஸ்லாமிய குடியரசான ஈரானுடனான ஒப்பந்தம் தற்போது முழுமையடைந்துள்ளதுஎன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனதுடிரூத் சோஷியல்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பதிவிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், திங்கட்கிழமை அதிகாலை இந்த உடன்பாடு எட்டப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது.

ஒப்பந்தத்தின் முழுமையான விபரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை எனினும், தற்போதைய தகவல்களின்படி:

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனை ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் பேரவையின் செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஈரான் முடக்கியிருந்த ஹோர்முஸ் நீரிணை வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என்றும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை விலக்கிக் கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “உலகக் கப்பல்களே, உங்கள் இயந்திரங்களை இயக்குங்கள். எண்ணெய் பாயட்டும்!” என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

இந்த வரைவு ஒப்பந்தத்தின் கீழ், முடக்கப்பட்டுள்ள ஈரானின் 25 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதமும், அமெரிக்காவின் டபிள்யூ.டி. (WTI) எண்ணெய் விலை 4.6 சதவீதத்திற்கும் அதிகமாகவும் சரிந்தன. அதேநேரம், ஆசிய பங்குச்சந்தைகள் நல்லதொரு எழுச்சியைக் கண்டுள்ளன.

இந்த முதற்கட்ட ஒப்பந்தம் போரை நிறுத்தினாலும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் எதிர்காலம் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கம் போன்ற சிக்கலான விவகாரங்கள் குறித்து 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தக் காலப்பகுதியில் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் காசிம் கரீபாபாடி தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் தற்போது குண்டு தயாரிக்கும் தரத்திற்கு நெருக்கமான 400 கிலோவிற்கும் அதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ள நிலையில், அதனை அழிப்பதா அல்லது ஈரானுக்குள்ளேயே அதன் செறிவைக் குறைப்பதா என்பது குறித்தே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் அமையும் எனத் தெரிகிறது.

இந்த உடன்பாட்டை எட்டும் நோக்கில், லெபனானில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்கா கோரியிருந்தது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கு உடன்பட மறுத்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular