அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து அவசரமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிக் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இன்று (12) அதிகாலை 1:00 மணியளவில் 217 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-606 என்ற ஏர்பஸ் A330 (Airbus A330) ரக விமானம் சிட்னி நோக்கிப் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இதன்போது, எதிர்பாராதவிதமாக விமானத்தின் மீது மின்னல் தாக்கியதாக விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு விமானி உடனடியாகப் பயணத்தை ரத்து செய்து, அதிகாலை 1:40 மணியளவில் விமானத்தை மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
மின்னல் தாக்கத்திற்குள்ளான விமானம் உடனடியாகப் பரிசோதனை மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பழுதுபார்க்கும் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்பின்னர், சிட்னி செல்லவிருந்த பயணிகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக மற்றொரு ஏர்பஸ் A330 ரக விமானத்தை ஏற்பாடு செய்தது.
இந்த மாற்று விமானம் இன்று அதிகாலை 6:06 மணியளவில் பயணிகளுடன் சிட்னி நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
