அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் கைது மற்றும் விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அரசியல் நாடகம் ஆடுவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னரே, இந்த விசாரணைகளை முடக்கும் நோக்கில் சலேவிற்காகப் பலர் பதறத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே முதல் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவர் சிறைக்குள் முள்ளங்கியும் சோறும் சாப்பிடுகிறார் என்று எவரும் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறவில்லை. அவரது தாய், மகன், மனைவி, சகோதரர் என யாரும் இதைப் பற்றிப் பேசியிருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை, அவருக்கு நல்ல உணவுகளும் கிடைத்தன. ஆனால், எப்போது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டதோ, அந்த நாளிலேயே இந்த அத்தனைப் பிரச்சினைகளும் வெடித்தன. அதன் பின்னரே சலே மீது விசேட கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
சலேக்கு ஆதரவாக கோட்டேயில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் 10 பேர் கூட இல்லை. அதைவிட அதிகமான எண்ணிக்கையிலான பொலிஸாரே அங்கு வீதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.
உண்மையில் இந்தப் போராட்டம் சலேவிற்காக நடத்தப்படவில்லை. இந்த விசாரணைகள் சலேவைத் தாண்டி, அவருக்கு மேல் மட்டத்தில் உள்ளவர்களை நோக்கிச் சென்றுவிடக் கூடாது என்பதை மூடிமறைப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை உரிய முறையில் நடத்தி குற்றவாளிகளைத் தண்டிப்போம் என நாம் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். தற்பொழுது சிலர் சலேவிற்காக அனுதாபத்தைச் சம்பாதிக்க முயல்கின்றனர், அதில் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் 278 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவை பற்றிப் பேசாத சில ஊடகங்கள், இன்று சலேவிற்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. அன்று ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கைதிக் சீருடை அணிவிக்கப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்ட போது இவர்களில் யார் குரல் கொடுத்தார்கள்? எவரும் குரல் கொடுக்கவில்லை.” என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலே தொடர்பிலான நீதி விசாரணைகள் உரிய முறையில் சுயாதீனமாக நடத்தப்படும். அதில் எங்களது அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இருக்காது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்கள் பொறுத்திருங்கள், நான் பேச வேண்டிய அவசியமே இருக்காது; அனைத்து விடயங்களும் சட்டப்படி நல்லபடியாக நடந்திருக்கும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
