HomeFeatured Newsபிரதேச செயலாளர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

பிரதேச செயலாளர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

திங்கள் கிழமைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானம் நாளை (ஜூன் 08) திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் அமலுக்கு வருவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

நேரடியாக நடத்தப்படும் கூட்டங்கள் மட்டுமன்றி, இணையவழியாக (Virtual) நடத்தப்படும் கூட்டங்களுக்கும் இந்த புறக்கணிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகாரிகள் திங்கள் கிழமைகளில் அடிக்கடி கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் காரணமாகவே இந்த அதிரடி முடிவை எடுக்க நேரிட்டதாக சங்கம் விளக்கியுள்ளது.

இத்தகைய கூட்டங்களால் பிரதேச செயலகங்களின் அன்றாட நிர்வாகச் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், தூர இடங்களிலிருந்து வரும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுநிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 27/2023 இன் படி, திங்கள் கிழமை என்பது முழுமையாக “பொதுமக்கள் நாளாக” (Public Day) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அனைத்து பிரதேச செயலாளர்களும் தத்தமது அலுவலகங்களில் தங்கியிருந்து, தங்களை நாடி வரும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு வழங்க வேண்டும் எனவும், அந்நாளில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களையும் நடத்தக்கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த வழிகாட்டுதல்கள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், நாளை முதல் திங்கள் கிழமைகளில் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களையும் திட்டவட்டமாகப் புறக்கணிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular