HomeTop Newsசாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள சுரேஷ் சலே

சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள சுரேஷ் சலே

முன்னாள் அரச புலனாய்வுத் துறை  பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காவல்துறை காவலில் தம்மை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

சுரேஷ் சல்லேயின் மனைவி மற்றும் மகனின் வேண்டுகோளுக்கு இணங்க, பொதுமக்களுக்கு ஒரு முக்கிய செய்தியைத் தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த ஊடக சந்திப்பு அவசரமாகக் கூட்டப்பட்டதாக கம்மன்பில குறிப்பிட்டார்.

சனிக்கிழமை காலை சுரேஷ் சலேயின் மகன் தந்தையை சிறையில் நேரில் சென்று பார்த்தபோது, அவர் மிகவும் மனவேதனையுடனும், சோகமான நிலையிலும் காணப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு சுரேஷ் சல்லேவுக்கு மிகக் குறைந்த அளவிலான சோறும், முள்ளங்கி கறியும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவு ஒரு செய்தித்தாளில் வைக்கப்பட்டு, தரையிலேயே வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சல்லே அதனை எடுக்க முயன்றபோது, உணவு தரையில் கொட்டியதாக தெரிவித்துள்ளார்.

இந்த அவமதிப்பால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் சல்லே, தனக்கு வழங்கப்படும் மனிதாபிமானமற்ற நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை இரவு முதல் உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ள மறுத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

தண்ணீர் மற்றும் உணவைத் தவிர்த்து, தனது அத்தியாவசிய மருந்துகளையும் அவர் உட்கொள்ள மறுத்து வருகிறார். தன்னை “ஒரு நாயை விட மோசமாக” நடத்துவதாகவும், தான் செய்த தவறு என்ன என்றும் அவர் தனது மகனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளையும், இந்த மனிதாபிமானமற்ற அவமதிப்புகளையும் சகித்துக் கொண்டு வாழ்வதை விட, மரணமடையும் வரை தனது போராட்டத்தைத் தொடரப் போவதாக சுரேஷ் சலே தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான சுரேஷ் சலே, 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதை அடுத்து, அரச புலனாய்வுத் துறையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும், அவர் அவற்றை ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

சுரேஷ் சலேயின் குடும்பத்தினர் சார்பில் உதய கம்மன்பில இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள போதிலும், இது குறித்து காவல்துறைத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது பதிலோ வழங்கப்படவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular