நைஜர் நாட்டின் சாஹாரா பாலைவனப் பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென பழுதடைந்ததால், தாகம் தாளாமல் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகாடெஸ் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாலி நாட்டில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய ஒரு குழுவினரே இந்தத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அவர்கள் பயணம் செய்த லாரி பழுதடைந்து, குடிநீரும் தீர்ந்துபோனதால் தாகத்தால் உயிரிழந்துள்ளனர்.
நைஜர் மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு இடையேயான முக்கிய எல்லைக் கடப்பான ‘அசமகா’ பகுதிக்கு மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில், மாலி எல்லைக்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
லாரி பழுதடைந்தவுடன், அதன் ஓட்டுநர், உதவியாளர்கள் மற்றும் பயணிகள் இணைந்து அதனைப் பழுதுபார்க்க முயன்றும் அது தோல்வியில் முடிவடைந்தது.
அப்பகுதியில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாததாலும், பாலைவனத்தின் கடுமையான வெப்பம் காரணமாகவும், அந்தச் சூழலில் அவர்களால் உயிர் பிழைக்க முடியாமல் போயுள்ளது.
உயிரிழந்த 49 பேரின் உடல்களும் பொதுக் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
50 கி.மீ நடந்து உயிர் பிழைத்த இருவர் இந்தக் கொடூரமான சூழ்நிலையிலிருந்து இரண்டு பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
அவர்கள் பாலைவனத்தில் சுமார் 50 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்தே சென்று ஒரு நீர்நிலையைக் கண்டறிந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அசமகா பகுதியைச் சென்றடைந்து அதிகாரிகளுக்கு இந்தத் துயரச் செய்தியைத் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் புலம்பெயர்ந்தோரின் முக்கியப் பயணப் பாதையாக இந்த பாலைவனப் பகுதி விளங்கி வருகிறது.
இப்பகுதியில் தாகத்தாலும், பசியாலும் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
