இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானுடனான மோதல் போக்கு மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் வாஷிங்டன் – இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மீதான தனது எதிர்-உளவுத்துறை அச்சுறுத்தல் மதிப்பீட்டை பென்டகனின் பாதுகாப்பு உளவு முகவர் நிறுவனம் “மிகவும் ஆபத்தானது” என்ற உச்சகட்ட நிலைக்கு உயர்த்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தற்போதைய அதிகாரிகள் இருவர் மற்றும் ஒரு முன்னாள் அதிகாரி அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாற்றத்தை விவரிக்கும் முகவர் நிறுவனத்தின் உள்நாட்டு செய்திக்குறிப்பை தற்போதைய அதிகாரிகளில் ஒருவர் நேரடியாகப் பார்த்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைத்து உளவு பார்க்க முயல்கிறது என்ற பென்டகனின் கரிசனைகளின் காரணமாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகத்தின் உள்வட்ட ஆலோசனைகள் மற்றும் அவர்களின் முடிவெடுக்கும் செயல்முறைகள் பற்றிய ரகசியத் தகவல்களைச் சேகரிப்பதே இஸ்ரேலின் இந்த உளவு வேலையின் நோக்கம் என்று அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7 பக்க ரகசிய அறிக்கை இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், இந்த மதிப்பீட்டில் 7 பக்க ஆவணமும், ஒரு குறிப்பிட்ட விளக்கப்படமும் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.
அதில், மனிதர்களைப் பயன்படுத்தி உளவு பார்ப்பது மற்றும் தொழில்நுட்ப ரீதியாகத் தகவல்களைச் சேகரிப்பது ஆகிய இரண்டிலும் இஸ்ரேலின் உளவுத் திறன் “மிகவும் ஆபத்தான நிலையை” எட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் கவலையை அதிகரித்த சில குறிப்பிட்ட சம்பவங்களும் அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலுக்குச் செல்லும்போது ஏற்கனவே கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இஸ்ரேலின் உளவுத்துறை குறித்துப் பேசுகையில், அவர்கள் மிகத் தீவிரமான முறையில் ரகசியத் தகவல்களைத் திரட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
