வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 235 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கார்லோஸ் அல்வராடோ தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை மாலை அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், இந்த இயற்கை பேரிடரினால் 4,300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த 4,300க்கும் மேற்பட்டோருக்கு நாங்கள் மருத்துவச் சேவைகளை வழங்கியுள்ளோம். இவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், நடுத்தர மற்றும் கடுமையான பாதிப்புகளுக்குள்ளானோரும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அவர்களில் பலருக்கு அவசர அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, எங்களது சுகாதார நிலையங்களுக்குக் கொண்டு வரப்படும் போதே எவ்வித உயிர் அடையாளங்களும் இல்லாத அல்லது வந்தடைந்த பின்னர் உயிரிழந்த சுமார் 235 பேரின் உடல்களை நாங்கள் பெற்றுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலநடுக்கங்களினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
